Friday, December 7, 2012

ஆனந்தத்தாண்டவர் அந்தாதி


உ சிவமயம்  திருச்சிற்றம்பலம் திருவெள்ளியம்பலம்
 17-1-2005

ஆனந்தத்தாண்டவர் அந்தாதி

 காப்பு

    சந்தனக் காப்பணிந்தோய்! சார்ந்தேன் நினதடியை
    உந்தை நடிப்பில் உணர்விழந்தோர் உந்தலினால்
    வந்திங்(கு) அடியேன் வடிக்க முயலுமிந்த
    அந்தாதிக் குன்றனருள் தா.

 
செய்யுள்

1. வெள்ளித் திரைக்கிடையில் தங்கநிறச் செங்கதிரோன்
    மெள்ளவே மூழ்குமந்த வேளையிலே - வெள்ளமுடன்
    வெண்டிங்கள் தாங்கிடும் வேணியனின் ஆடலகக்
    கண்கொண்டே உண்டிடுவேன் யான் 

2. யானென் றறியாமை யால்நினைக்கும் நோய்தீர்ந்து
    ஞான நிலையென்று நானடைவேன்? - மோனமாய்
    நின்றிருந்தே காலத்தை நீட்டிவிட்டீ ராதலினால்
    இன்றே இறுப்பீர் விடை

3. விடையிருப்பீர்  நல்லதொரு வேடம்போட் டெங்குங்
    கடைவிரிப்பீர் கால்தூக்கி யாடித் - தடையின்றி
    ஈவேன்யான் என்றெனக்குக் கைச்சமிஞ்ஞை காட்டிடுவீர்
    போவேனோ வேறோ ரிடம்

4.  இடப்பாகம் நீர்ஏற்ற ஈசுவரி தேவி
    அடக்காமல் விட்டதனால் ஆடி -  இடக்காக
    ஏதேதோ கூறியெனை ஏமாற்றப் பார்க்கின்றீர்
    யாதேயான் செய்யவிய லும்?

5.  உம்மென் றிருந்திடினும் ஊழிமுடி வெய்திடினும்
    சும்மா விடேனுமைச் சுந்தரரே - அம்மா
    பரதேவி பால்சென் றழுவே னதற்குள்
    வரமளிப்பீர் வேண்டாமிவ் வம்பு

6.  அம்பளித்தீர் அன்றவ் வருச்சுனனுக் காதரவாய்க்
    கம்பேந்தும் வேடனாய்க் கானகத்தில் - எம்பவநோய்
    தீர்த்திடென் றாலேன் திகைக்கின்றீர் உம்முடைய
    கீர்த்தியறி வான்அம் புலி

7.  புலித்தோ லணிந்த பசுபதியே! போற்றிப்
    புலிப்பாதர் பேணுங்கால் தூக்கித் - தளுக்காய்ச்
    சலிக்காம லாடும் சதானந்தக் கூத்தில்
    வலிக்காதோ உன்றனிடக் கால்?

8.  கால்மாற்றி யாடக் கனகசபை விட்டெங்கள்
    சேல்விழியாள் தென்மதுரை சேர்ந்திட்டீர் - பால்வண்ண!
    ஆதிரையில் உன்நடனம் ஆங்குநான் கண்டன்றோ
    வாதின்று செய்யவந் தேன் 

9.  தேனார் மலர்ப்பாதம் தூக்கி யிஇடவலமாய்த்
    தான்தோன்றி யாகநீர் மாற்றுவதைத் - தானறிந்து
    கண்டிலேன் தாளென்று கைவிரித்தான் ஏழுலகும்
    உண்டவன்முன் நாளதனில் ஓர்ந்து

10.ஓரோர் கணமும்ஐய! உன்நினைவே யென்னகத்தில்
    நீரோட்ட மாக நிலைத்ததனால் - பார்கடந்து
    நாதாந்தத் துள்நடிக்கும் நாத!உனை யான்கண்டேன்
    வேதாந்த ஞானவெளி யில்

  
முடிப்பு

    அம்போ ருகபாதன் ஆனந்தத் தாண்டவத்தை
    என்போற் சிறுவனு மிஇன்பமுடன் - தன்போக்கில்
    கூறி மகிழத் துணிந்தேன் குறைபொறுப்பீர்
    மாறிடா மாண்புடனே நீர்


குறிப்புகள்:

பாடல் 1. காப்புப் பாடல்: மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோவிலில் உள்ள முக்குறுணிப் பிள்ளையாரின் சந்தனக் காப்பணிந்த கோலத்தை நினைவு கொண்டு, "ஐயனே! உன் தந்தையின் நடனத்தில் மெய்ம்மறந்து எழுந்த உள்ளத் தூண்டுதலால் அவனது தாண்டவத்தை அந்தாதிப் பாடலாக எழுத நினைக்கும் இந்த அடியவனுக்கு அருள்புரிவாய்!" என வேண்டுவது.

பாடல் 2. மதுரையில் உள்ள வெள்ளியம்பல நடராசனின் ஆனந்தக் காட்சியையும், தில்லையிலுள்ள பொன்னம்பலத்தாடுவானின் அழகிய காட்சியையும், வெள்ளிநிற அலைக்கடலில் தங்கநிறக் கதிரோன் அத்தமனமாகும் பிரதோஷ வேளையின் மாட்சி ஒருங்கே மனத்தகத்தில் நினைவுறுத்தும் என்பது.

பாடல் 6. முன்பு வேடன் (கிராத) வடிவில் வந்து அர்ச்சுனனுனுக்குப் பாசுபதமென்னும் அம்பை அளித்துள்ளீர், சாபத்தினால் தேய்ந்து மறைந்துகொண்டிருந்த சந்திரனை உம் தலையில் தரித்துக் காப்பாற்றினீர்; இஇன்று என்னுடைய பிறவிப் பிணியை அகற்றல் உமக்கு எளிய செயலேயன்றோ என்று இறைஞ்சுதல்.

பாடல் 8: ஐயன் தில்லையில் தூக்கியாடும் இஇடது கால் வலியாதோ என்ற கவலையால், இமுன்னம் மதுரையில் பாண்டிய மன்னன் ஒருவன் காலை மாற்றியாடும்படி கேட்ட வேண்டுகோளுக்கிணங்கித் தன் வலதுகாலைத் தூக்கியாடிக் காட்சி தந்து 'அதிரவீசியாடி' என்னும் பேர்கொண்ட இஇறைவனின் சொல்லொணாத் திருக்கோலத்தைத் திருவாதிரை நன்னாளில் மதுரையம்பதியில் கண்டு களித்ததை நினைவு கூர்தல்.

 

No comments: