Wednesday, December 12, 2012

என்னுடைய தாய்


திருச்சிற்றம்பலம்

என்னுடைய தாய்


அன்றென் சிறுவயதில் அன்னையுன் கோயிலுக்குச்
சென்று தொழுதழுது சேவித்தேன் - என்றென்றும்
என்னுடைய தாய்த்தோன்றும் எல்லா உணர்வுள்ளும்
என்னுடைய தாய்நீ இரு

இருந்தும் கிடந்தும் எனைச்சார்ந்தோர் உள்ளம்
வருந்தும் படிவாழ்ந்தோன் மாறித்- திருந்திட
என்றாய் பரிவோ(டு) 'எழுந்தென் அருகேவா!'
என்றாய் உனக்கெவர்தாம் ஈடு?

ஈட்டும் பொருளைஎல்லாம் என்மனம் போல்வீணர்
காட்டும் வழியில் களைந்துள்ளம் - வாட்டமுற்ற
காலை கடைத்தேற வேண்டிநான் உன்றன்இரு
காலை அடைந்தேன் கதி

கதறி அழுங்குழவி கண்(டு)அன்னை உள்ளம்
பதறிப் பரிந்தெடுக்கும் பாங்காய்ப் - பதடியென்னை
வாரி எடுத்தணைத்த வண்ணம் நினைந்தென்கண்
வாரி எனவடிக்கும் நீர்

நீராம்பல் போல்நிறத்து நேத்திரமும் நெற்றியிலே
சீராய்த் திகழும் திலகமும் - நேர்கண்ட
போதில் வசமிழந்தேன் போற்றியினி நின்பாதப்
போதில் அடைவேன் புகல்

புகலற் கரியநின் பொற்பைஇப் புல்லன்
புகழ்ந்திட நாணும் பொழுதென் - அகத்துள்
பரவும் ஒளிஉருவைப் பார்த்தவண்ணம் பாடிப்
பரவும் பரவசமாய் நா

நாடோறும் நாயேன் நடத்தும் செயல்களின்
ஊடேநின் ஆற்றல் உணரவைத்(து) - ஈடேறும்
வண்ண(ம்) அறிவித்தாய் மாசில் மரகத
வண்ண மணியனைய நீ

நீயென்றன் நெஞ்சமெனும் வானில் முழுமதியாய்க்
காய்கின்ற காட்சிதனைக் கண்டகணம் - மாயை
மறைக்கும் திறனிழந்து மாய்ந்தது!நீ அன்றோ
மறைக்கும் முதலாம் பொருள்

பொருளுணர்ந்துன் பேரைப் புகலும் வரத்தை
அருளும் திருநாள் அருகில் - வருமென்று
காத்திட வைப்பாயோ? காலடியைப் பற்றிநின்றேன்
காத்திட வாராய் கடிது

கடிமணம் நீபுரிந்த காதலனை மீனக்
கொடியுடன் கோலோச்சச் செய்தாய் - அடியேன்உள்
ஒன்றும் வகையில் உனையுணர வைத்தாய்வே(று)
ஒன்றும் உயர்ந்ததெனக்(கு) அன்று


யாப்பு: இது பின்மடக்குப் பதிற்றுப் பத்தந்தாதி வகையைச் சேர்ந்தது:

..அனந்த் (ஜூலை 12, 2005)
23-6-2010



No comments: