Monday, January 2, 2012

அம்பலத்தார் அம்மானை - புனைவு- 1


திருச்சிற்றம்பலம்
  

அம்பலத்தார் அம்மானை- பகுதி 1 


அம்மானைப் பாடல்கள் பற்றி ஒரு சிறு முன்குறிப்பு:

தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரக் காலத்தில் தொடங்கி அண்மைக்காலம் வரையாகப் பலவகையான அம்மானைப் பாடல்கள் காணப்படுகின்றன. இங்கு நாம் காண்பவை அவற்றில் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவை.

இப்பாடல்கள், வஞ்சப்புகழ்ச்சி (நையாண்டி), சிலேடை அணிகள் அமையப் பெற்று, நகைச்சுவையோடு விளங்கும். இறுதியடியில் சிலேடை நயம் தோன்ற விடையளித்து ஒரு திருப்பத்துடன் முடிக்கும் முறை இவற்றிலுள்ள தனிச் சிறப்பென்னலாம். இவை அம்மானைப் பாடல்களின் அழகிய பரிணாம வளர்ச்சியை பறை சாற்றும்.

இப்பாடல்களின் பின்னணியான அம்மானை விளையாட்டில், பாட்டுடைத் தலைவனின் குணநலன்களைக் கூறும் ஒரு பெண்ணும், அவை பற்றிய கேள்வியொன்றை எழுப்பும் இன்னொரு பெண்ணும், அதற்கு விடையளிக்க மூன்றாவதாக ஒருபெண்ணும் பங்கெடுப்பதாகக் கற்பனை செய்யலாம். அல்லது, இரு மகளிர் மட்டுமே இருப்பதாகவும் கருதலாம்.

இவ்வகை அம்மானைப் பாடலை வெண்டளை பயிலும் அல்லது பயிலாத தரவு கொச்சகக் கலிப்பா அல்லது 'உறழ்கலிப் பா' (வினா-விடை கொண்ட கலிப்பா) என்னும் வகையைச் சார்ந்தது எனக் கொள்ளலாம். தனக்கென ஒரு தனி நடையை வகுத்துக்கொண்டு படிப்பதற்கு இன்பந்தரும்.

அம்மானைப் பாடல்களின் இலக்கியமும் இலக்கணமும் பற்றி விரிவான கட்டுரையை இங்கே காணலாம்:
அம்மானைப் பாவின அமைப்பில் நான் முயன்ற சில பாடல்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------

1.  மெய்யில் பாதி
கைலாயத்தில் ஒரு காட்சி. சிவபெருமான் தன் அருமை மனையாள் உமையிடம்  மாட்டிக்கொண்டு விழிக்கிறார். பார்வதியாளின் சினம் இமயத்தை விஞ்சும் போலத்  தோன்றுகிறது.

பாவம், அப்படி என்னதான் பிழை செய்து விட்டார் நம் அப்பாவி  சங்கரர்?  

என்ன செய்தாராவது? இமயமலைக்கு அரசனின் ஒரே புதல்வியாக, உடல் முழுதும் பொன்னும்  மணியும் இழைத்துச் செல்வத்தில் திளைக்கும் பார்வதி ஆசைப்பட்டு, தவம் கிடந்து கல்யாணம் செய்துகொண்ட பரமேசன், ஊர் ஊராக அலைந்துகொண்டு பிச்சையெடுப்பது தான் அவர் செய்த தவறு.

கையில் ஒரு நல்ல பாத்திரம் கூட இல்லாமல் மண்டையோட்டை ஏந்திப்  பிச்சை கேட்கச் செல்வது இன்னும் தவறு.

இது போதாதென்று, பிச்சையெடுக்கையில் ஒரு  நல்ல ஆடை கூட அணியாமல் தான் என்றோ கிழித்த புலித்தோலை இடுப்பிலும், கரித்தோலைத் தோளிலும் போர்த்துக் கொண்டு போவது தவறிலும்  தவறு.

இந்த அலங்கோல உடையில்  ஆங்காங்கு விழுந்த ஓட்டைகளைத் தான் தைத்துக் கொண்டு அந்த ஒட்டுப்போடல்கள் ஊரார்  கண்ணுக்குத் தெரியாமல் ஒரு கையால் மறைத்துக்கொண்டு போகும் அவலம் வேறு.  

இவற்றிலெல்லாம் பெரிய்ய்ய்ய்ய, மகா மகாத் தவறு இந்தச் செயலைத் தன் மனையாளிடம்  கூறாது மறைத்து வைத்திருந்தது. இப்போது, அவர் செய்யும் தொழில் பற்றி அவளுக்குப்  பிறர் வழியாகத் தெரிந்து போனது.

இமவான் மகள் கண்ணின் கோப ஜ்வாலையிலிருந்து  தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு வழி கண்டுபிடிக்கிறார் அரன்.

இதை மனத்தில்  வைத்து ஒரு அம்மானைப் பாடலைப் பார்ப்போம்.
*கையிலே ஓடேந்திக் காசினியில் போயிரந்தும்
தையலிடம் காட்டாது தான்மறைப்பார் அம்மானை
தையலிடம் காட்டாது தான்மறைப்பார் ஆமாகில்
மைவிழியாள் சீற்றம்எங்ஙன் மாற்றிடுவார் அம்மானை?
மெய்யிலே பாதியைத்தான் விட்டிடுவார் அம்மானை!*
(தையலிடம் = உடையில் தைக்கப்பட்ட இடங்கள்; பெண்ணிடம் (மனைவியிடம்); மெய் =  உண்மை, மேனி)
ஆக, “மெய்யிலே பாதியைத்தான் விடுவதேசிவன் கண்டுபிடித்த வழி.

இதற்கு, தன்  உடம்பிலே பாதியை உமைக்குக் கொடுத்து இனித்தான் எங்கு போனாலும் உடனிருந்து அவள் கண்காணிக்க இயலுமாறு செய்தது என்றோ அல்லது, தான் வெளியே போனது உண்மைதான் என்று  மட்டும் சொல்லி, அது  சும்மா உலகோர் எப்படி இருக்கிறார்கள் என்று க்ஷேமலாபம்  விசாரிக்கத்தான், பிச்சையெடுக்க அல்ல என்று அவள் கருதும்படியாகப் பாதி உண்மையைச் சொன்னது என்றோ பொருள் கொள்ளலாம்!
கற்களையோ காய்களையோ தூக்கிப் போட்டுப் பிடித்துப் பெண்கள் விளையாடும் அம்மானை  ஆட்டத்தில் கேள்வி-விடை வடிவத்தில் வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடுவதாக அமையும் இத்தகைய அம்மானைப் பாடல்கள் பற்றிய மேலும் சில விவரங்களை அடுத்து வரும்  இடுகைகளில் பார்ப்போம்.
----------------------------------------------------------------------------------------------------------
2.   கண்டவிடம்
முந்திய அம்மானைப் பாடலில் ( http://groups.google.com/group/nambikkai/browse_thread/thread/f963b4f79ff10758# ),  சிவபெருமானுடைய பிக்ஷா கோலத்தையும் அதனால் வந்த விளைவுகளையும் பார்த்தோம்.

இப்போது அவர் செய்யும் வேறு சில விசித்திரமான செய்கைகளைப் பற்றி நமது அம்மானைப் பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம்.
அம்மானைக் காய்களில் சிலவற்றை மேலே தூக்கிப் போட்டு அவை கீழே விழும் முன் தரையில் மீதமுள்ள காய்களை விசுக்கென்று ஒருகையில் வாரி எடுத்துக் கொண்ட ஜோரிலே, முதல் பெண் பாடத்தொடங்குகிறாள்: 

எங்கள் சிவனார் இருக்கிறாரே அவர் என்னவெல்லாம் செய்யும் திறமை படைத்தவர் தெரியுமா? கிடைத்தற்கரிய, மிக மிகப் பழையதான ஒரு வாகனத்தைத் தம் வசம் வைத்துக்கொண்டு இருக்கிறார். (தற்போது antique car உரிமையாளர்கள் பீற்றிக் கொள்வது போல).

நல்ல உயரமான மாடாகிய அதில் சிரமப்பட்டு ஏறி, அது லொடக்கா லொட்என்று காலை வைத்து நடக்கையில் தான் விழாமல் சமாளித்து அதில் தொற்றிக் கொண்டு நம் பெருமான் உலகிலுள்ள யாவரும் காணும் படி உலாவுவார்.

இறுதியில், தம் ஊர்தியிலிருந்து, எல்லோரும் திரண்டு கூடும் ஒரு பொதுவான இடத்தில் கீழே இறங்கி, மாட்டுப் பயணத்தின் விளைவாகச் சுளுக்கிக் கொண்ட காலைத் தூக்கிக் கொண்டு நொண்டுவார், தெரியுமா?“
இதைக் கேட்ட இரண்டாவது பெண் சொல்கிறாள்:

அச்சச்சோ! உங்கள் தலைவர் இப்படிக் கிழட்டு மாட்டில் பவனி வருவதையும், எல்லோரும் காண நொண்டுவதையும் அவரை மிக உயர்வாக மனத்தில் கொண்டிருக்கும் அவரது தொண்டர்கள் பார்த்தால் என்னாவது?

அதனால், அவர்களைத் தம்மை நெருங்கிப் பார்க்க விடாமல் (கொடுத்த ஜோலியப் பாக்காம, இன்னாடா இங்கே தமாசு பார்த்துகினு நிக்குறேஎன்று சொல்லித்) துரத்தி விடுவாரோ?”
இதைக் கேட்ட முதல் பெண் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் வகையில், “சீச்சீ! அப்படியெல்லாம் எங்கள் தலைவரைப் பற்றி நினைக்காதே! தம் தொண்டர்களை எங்கு எப்போது கண்டாலும், அன்பு வடிவான எங்கள் ஐயன் உடனே போட்டது போட்ட மேனிக்கு விட்டு அவர்கள் வேண்டுவதைக் கொடுத்துக் காப்ப்பாற்றுவராக்கும்!என்று சொல்லி முடிக்கிறாள்.

அதே சமயம் தான் வாரியெடுத்துத் தன் பக்கம் ஒதுக்கி வைத்திருந்த அம்மானைக் காய்களின் எண்ணிக்கை மற்றவளுடையதை விடக் கணிசமாகக் கூடி விட்டதால், ஒரு பெருத்த வெற்றி முழக்கத்துடன் ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளியும் வைக்கிறாள்.
இப்போது. அம்பலத்தார் அம்மானைஎன்ற தலைப்பில் உள்ள இந்தப் பாடலைப் பார்ப்போம்.    
தொண்டுகிழ மாடதன்மேல் தொற்றியுல கோரெல்லாம்
கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டும் அம்மானை;
கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டு வாராயின்
தொண்டர்தமைக் கண்டால் துரத்துவரோ அம்மானை?
.... கண்டவிடம் தாம்நிறுத்திக் காத்திடுவார் அம்மானை (1)
மேல் விளக்கம்:
தொண்டு கிழ மாடு = நந்தி; முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாக விளங்குபவனின் வாகனமும் தொன்மை வாய்ந்ததே. (தொண்டு= அடிமை, பழைமை, கடவுள் வழிபாடு).
அம்பலம் = மக்கள் கூடும் பொது இடம்; இங்கு, நடராசப் பெருமான் திருநடம் புரியும் தில்லை, மதுரை, திருநெல்வேலி, திருவாலங்காடு, குற்றாலம் ஆகிய தலங்களில் உள்ள, பொன், வெள்ளி, தாமிர, இரத்தின, சித்திர சபைகளைக் (மன்றங்களைக்) குறிக்கும். 
கால் நொண்டும் = ஒருகாலை மேல் தூக்கி ஒருகால் தரையில் ஊன்றி இருக்கும் நடனத் திருக்கோலத்தைக் குறித்தது.
கண்ட விடம் காத்தல் = தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைகையில் எழுந்த விடத்தைத் தயாஸ்வரூபியான நம் இறைவன் தம் கண்டத்தில் (கழுத்தில்) இருத்தித் தேவர்கள் அமுதம் பெற வழிசெய்து, அவர்களை அசுரரிடமிருந்து காத்தது.

----------------------------------------------------------------------------------------------------------

3.   விசித்திரக் குடும்பம்
'The Addam Family' என்று திரைப்படமாக்கப் பட்ட ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரில் வரும் குடும்பம் ஒன்றில் எல்லோருடைய முகங்களும் உருவங்களும் விசித்திரமாக இருக்கும் (இணைப்பிலுள்ள படத்தைப் பார்க்கவும்).
இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அப்படி இருக்குமே ஒழிய, நம் சிவபெருமானின் குடும்ப நபர்களைப் பற்றி நன்கு தெரிந்துள்ள நமக்கு இது ஒரு பெரிய அதிசயமாக இருக்கவே இருக்காது.
இந்தக் குடும்பத் தலைவருக்கு அன்னை தந்தை கிடையாது,
அவர் தாமாகவே தோன்றியவர். அதனால் தம் இஷ்டத்திற்கு ஒன்றுக்கு ஐந்தாய் முகங்களைத் தாங்கிக் காட்சி அளிப்பார். அதாவது, நம் பெருமானுக்கு (தலீவருக்கு) அஞ்சுமுகம்.
அப்படிப்பட்டவருக்கு வாய்த்த பெண்ணாள் அழகிய ஒரு முகத்தைக் கொண்டவள் எனினும், ஏனோ பிள்ளைகள் இருவரும் தகப்பனைப் போல முக விசித்திரம் கொண்டவர்கள்.
ஒரு பக்கம் மூத்தவனான விநாயகனுக்கு மனித முகமே இல்லாமல் ஒரு யானையின் முகம் உண்டு என்றால், மறுபுறம் இளையவனான வேலனுக்குத் தகப்பனை விட ஒரு முகம் ஜாஸ்தி உண்டு. அவன் ஆறுமுகம் கொண்டவன். (அதனால்தான் தகப்பன் சாமியாகப் பின்னர் ஆனானோ என்னவோ?).
இப்போது, சிவபெருமானை அணுகி அருள் பெறக் கைலாயம் வரும் அடியவர்களின் நிலையைப் பார்ப்போம்.

சிவபெருமானை நெருங்குமுன் அவர்கள் முன்னே ஓடிவரும் ஆனைமுகன், ஆறுமுகன் இருவரும் சிறு குழந்தைகள் ஆதலால் அவர்கள் முகம் தங்கள் முகங்களிலிருந்து மாறுபட்டிருக்கின்றனவே என்று அடியார்கள் அச்சம் கொள்வதில்லை.

ஆனால்.., ஆனால்.. இறைவன் கிட்ட நெருங்க.., நெருங்க அவரது அஞ்சுமுகம் தெரியத் தொடங்குகிறது.

அவ்வளவுதான்! எல்லோருக்கும் அச்சம் அடிவயிற்றைத் தாக்குகிறது. இருக்காதா பின்னே? அஞ்சுமுகம் என்பதனால் பிறர் அஞ்சுவது இயற்கைதானே?
சரிதான், சரிதான்! சிவனை அண்டுவோர்கள் எல்லோரும் இப்படிப் பயப்பட்டால், பின்னே அவர் பக்கலில் எந்த அடியார்தாம் அஞ்சாமல் நிற்க இயலும்? அப்படி யாரேனும் உள்ளார்களா?

ஏனில்லாமல்? இரண்டு வீர தீர சூரப் புலிகள் உண்டு.

ஒரு புலியார் அரனின் தலை மேலேயே ஏறி அமரும் தைரியம் உடையவர்.

இன்னொருவர், ஐயனின் கால் மாட்டில் நின்று கொண்டு, அவர் எந்த விதமாக தாண்டவம் ஆடினாலும் - ஆனந்தத் தாண்டவமோ, உருத்திரத் தாண்டவமோ, பிரளயத் தாண்டவமோ, எதுவாகிலும் சரி - நம் அஞ்சுமுகனாரைக் கண்டு பயப்படாமல் தாளம் போட்டுக் கொண்டும், மயிர்க்கூச்செறிந்து கொண்டும் (பயத்தால் அல்ல, பரவசத்தால்!) நிற்பார்கள்.

நம் இரு அம்மானைப் பெண்கள்சொல்லிவரும் இந்தக் கதைக்கான பாடலை இப்போது பார்ப்போம்.
பிஞ்சுகளாய் ஆனைமுகன் ஆறுமுகன் பெற்றுத்தான்
அஞ்சுமுகம் பூணுகின்ற ஐயன்காண் அம்மானை;
அஞ்சுமுகம் பூணுகின்ற ஐயனே ஆமாயின்
அஞ்சாது அண்டிடுவோர் யாரோசொல் அம்மானை?
..அம்புலியும் வெம்புலியும் அண்டிடுவார் அம்மானை!
முதல் பெண் சிவபெருமானின் விசித்திரக் குடும்பத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதையும், உடனே அடுத்தவள் அவளை ஒரு கேள்விக் கொக்கியால் மடக்கப் பார்ப்பதையும், அதிசாமர்த்தியசாலியான முதலாமவள் அதற்குத் தகுந்த விடையைத் (நெத்தியடியைத்) தருவதையும் கவனித்தீர்களா?
இப்படிப்பட்ட அறிவுக்கூர்மையை வளர்க்கத்தான் அந்தக் காலத்திலே (நான் காலேஜ் படிக்கறப்போ..) அம்மானை போன்ற அற்புத விளையாட்டுகளை ஆடினார்கள் என்பது இப்போதாவது புரிகிறதா?
மேல் விளக்கம்:

வெம்புலி = சிவபெருமானுக்குத் தாம் பூசை செய்வதற்காக மரங்களின் உச்சியிலுள்ள பூக்களையும் பறிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தமக்குக் கூரிய நகங்கள் கொண்ட புலியின் காலைத் தருமாறு வேண்டி வரம் பெற்ற வியாக்கிர பாதர் என்னும் முனிவர். இவரும் பதஞ்சலி முனிவரும் சதா சர்வகாலமும் சிவ தாண்டவத்தைப் பார்த்து மகிழும் பெரும்பேறு வாய்த்த புண்யசீலர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------


4. ஆடல் காணீரோ
பார்வதி அன்னையைப் பார்த்து, “பேயாண்டி தனைக்கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்?” என்று கேட்கும் ஒரு பரத நாட்டியப் பாடல் (பதம், சாரங்கா ராகம்) உண்டு.
அதற்கான விடையை இதுவரை யாருக்கும் நம் அன்னை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை- அவருக்கே விடை தெரியுமா என்பதே சந்தேகம்!
சரி, ஏதோ குருட்டுக் காதலின் பிடியில் சிக்கி, மையல் கோண்டு மணமும் புரிந்தாயிற்று. எனவே அதை விடுங்கள்.
திருமணத்திற்குப் பின் நடந்த கதையைப் பாருங்கள்.
 முந்திய அம்மானைப் பாடல்களில் நாம் கண்டவாறு, தாம் தோன்றிய நாள் தொட்டு, கையில் மண்டையோடேந்தி, கிழட்டு மாட்டின் மீதேறி ஊரெங்கும் இரந்துண்ணும் ஏழையாகத் திரிந்த சிவபெருமானுக்கு, உலகிலேயே உயர்ந்த மலைக்கு அதிபரும், அளவற்ற செல்வமுடையவர் ஆனவருமான ஹிமவானின் ஒரே புத்திரியான பார்வதியை மணந்ததில் பரம குஷி!

தனக்கென ஒரு தனி இருப்பிடம், ஒரு குடிசை கூட இல்லாமல், மாடே வீடென்று கதியாகத் திரிந்த கதைக்கு (சிலசமயம் ரிஷபத்தை விட்டிறங்கி ஒரு ஆலமரத்தடியைக் குடிலாகக் கொள்வதுமுண்டு) ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்து, இனிமேல் ஜாலியாக மாமனார் வீட்டில் மலைவாசியாகப் பூத கணங்களோடு நிரந்தரமாகக் குடியிருக்கலாம் என்ற நினைப்பில் அவரது சந்தோஷம் குடுமியை, அதாகப்பட்டது, சடையைப் பிய்த்துக் கொண்டு போக முயன்றது (கங்கையும் திங்களுமாகச் சடையை இறுகப்பிடித்து நிறுத்தி வைத்ததாகக் கேள்வி!).

இந்த மாதிரியான இண்டர்னல் மேட்டரைஎல்லாம் தவிர்த்து, ’பெர்ம்மனன்ட்இமயமலை வாசியாக ஆன பெம்மான் பற்றிப் பெருமையாகச் சொல்லியவாறே அம்மானை ஆட்டத்தைத் தொடங்குகிறாள் சமத்காரவல்லி (ஆம்,அதுதான் நம் அதி புத்திசாலியான முதல் பெண்ணின் பெயர்).
 பெண்ணெடுத்த வீட்டினின்றும் பேர்ந்திடஓர் போக்கின்றித்
தண்பனிசூழ் மாமலையில் தானமர்ந்தார் அம்மானை!
பேர்ந்திட ஓர் போக்கின்றிஎன்ற இடத்தைச் சொல்லும்போது, சிவ பெருமானுக்குத் தம் மனையாளை விட்டுப் பிரிய மனமில்லாததால் அவர் இமயமலையிலேயே தங்கி விட்டார் என்று அர்த்தம் தொனிக்கும்படி அழகாகப் பாடிவிட்டு நிறுத்தினாள் சமத்காரவல்லி.

இதைக் கேட்டுச் சும்மா இருப்பாளா சூரவல்லி? (இரண்டாவது அம்மானைப் பெண்ணின் நாமதேயம் இது).

தன் மூளையைக் கிண்டி, ஒரு கிண்டல் பொதிந்த கேள்வியைச் சமத்காரவல்லியின் முன் போட்டாள்.

எப்போது என்கிறீர்கள் சமத்காரவல்லிப் பெண் அம்மானைக் காய்களை மேலே தூக்கிப் போட்டு அவற்றின் மேல் முழுக்கவனம் செலுத்தியவாறு இருக்கும் நேரம் பார்த்து!

அது என்ன கேள்வி என்பதற்கு முன் சூரவல்லியின் உட்கிடக்கையை நோக்குவோம்.
 
(உட்கிடக்கையை வெளியிடக் கூடாது ஆகையால் வளைவுக் குறிகளுக்குள் தருகிறேன்:

என்ன இருந்தாலும், நம் உமையம்மைக்கு ஈடாக ஒரு பெண்ணையும் சொல்ல முடியாது தான்.

எந்தப் பெண் கல்யாணமாகி யுகங்கள் ஆனபின்னும் ஒரு தடவையாவது, தன் அகமுடையானை அவரது வீட்டைக் காட்டித் தருமாறு கேட்காமல் இருப்பாள் சொல்லுங்கள்.

சங்கரியின் இந்த அற்புதமான குணம் சிவனுக்கு மிகப் பிடித்த ஒன்று. உண்மையில், அவரது மானத்தை வானத்தில் பறக்க விடாமல் செய்த அரிய குணமல்லவா இது?

உமையாள்மட்டும் புக்ககத்திற்கு அழைத்துச் செல்லக் கேட்டிருந்தால், ஆலமரத்தடியையோ, மாட்டின் முதுகையோ காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அதனால் விளையும் அவமானம் எல்லாம்... ஐயோ! நினைக்கவே பயமாயிருக்கிறது.

ஆக, சமத்காரவல்லியின் கதாநாயகன், இமயத்தின் உச்சியில், பனியே மலையாக ஆனதோ என்னுமளவிற்குக் குவிந்திருக்கும் பனிக்கட்டிகள் நடுவே, உடலை வெட்டும் குளிர்காற்று அடிப்பதையும் பொறுத்துக் கொண்டு இருப்பது தனது ஏழ்மையின் காரணமாய் விளைந்த வீடில்லாமையினால் அல்லவா?

(இதை எழுதும்போது என் படிப்பறை ஜன்னல் வழியாக, வீட்டின் முன் குவிந்திருக்கும் பனிக்குன்றும், கானடாக் குளிர்காற்றில் நடுங்கியவாறு நடக்கும் ஆட்களும் கண்ணில் படுகிறார்கள்!).

இதை நாசூக்காகச் சமத்காரவல்லியிடம் சுட்டுவோம், சுட்டிச் சுடுவோம்..).

இப்போது கேள்விக்கணை வருகிறது:

ஆமாம், உங்கள் சிவனார் இப்படிக் குளிர்ந்த பனி சூழ்ந்த மலையிலே, பேருக்கு ஒரு புலியோ யானையோ எதனுடையதோ தோலைப் போர்த்திக் கொண்டு நிரந்தரமாக அமர்ந்திருந்தால், உலகத்திற்கே தலைவரான அவரது உடம்பு குளிரில் வெட வெடஎன்று ஆடாதோ?”
தண்பனிசூழ் மாமலையில் தானமரு மேயாயின்
அண்ணலுடல் தான்குளிரில் ஆடாதோ அம்மானை?
இந்த மாதிரியான ஒரு கேள்விவரும் என்று முன்பே ஊகித்திருந்த நம் சமத்காரவல்லி, ஒரு கண்சிமிட்டுக் கூட இல்லாமல் அதற்கு அதிரடிப் பதிலளிக்கிறாள்:
ஆடல் அவர்தொழிலாய் ஆனதுவே அம்மானை!
அவர் உடல் ஆடுவது பற்றித்தானே அக்கறையாய் விசாரிக்கிறாய்? நீ கவலையே படவேண்டாம்!

எப்போது பார்த்தாலும் தா, தை என்று குதித்துக் கூத்தாடி மகிழும் எங்கள் பரமேட்டிக்கு, ஆடுவதையே தொழிலாகக் கொண்ட என் அம்மானை நாயகனுக்கு, இந்தக் குளிரில் உடம்பு சற்று ஆடுவது ஒரு பொருட்டாகுமோ?

(அவள் மேலும் சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்டது: அதனால், நீ பாட்டுக்கு சிவனைப் பற்றி நான் சொல்வது பற்றி யெல்லாம் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, இம்மாதிரியான அசட்டுத்தனமான கேள்விகளை எல்லாம், இதுவரை நீ பிடித்துள்ள ஓரிரண்டு காய்களுடன் தூக்கியெறிந்துவிடு!”).

பாவம், சூரவல்லி! அவளது தொங்கிய முகத்தின் பாவத்தை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.
முழுப் பாடல்:
பெண்ணெடுத்த வீட்டினின்றும் பேர்ந்திடஓர் போக்கின்றித்
தண்பனிசூழ் மாமலையில் தானமர்ந்தார் அம்மானை
தண்பனிசூழ் மாமலையில் தானமரு மேயாயின்
அண்ணலுடல் தான்குளிரில் ஆடாதோ அம்மானை?
..ஆடல் அவர்தொழிலாய் ஆனதுவே அம்மானை.  
தில்லையில் இடது காலைத் தூக்கியும் மதுரையில் வலது காலைத் தூக்கியும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆலயங்களில் ஆனந்த நடனம் ஆடியும் அன்பரைப் புரக்கும் எம்பிரான் நம் உள்ள மன்றங்களிலும் ஆடுமாறு, ஆடிக்கொண்டே இருக்குமாறு வேண்டிக்கொண்டு,
----------------------------------------------------------------------------------------------------------
5. ஓட்டைக் கையேந்தி...


நம் சிவபெருமான் படும் கஷ்டங்களை அம்மானைப் பெண்கள் பாடுவதைக் காணும்போது, “தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்தத்  தாழ்வெல்லாம் வருமோ ஐயா?” என்று கோபாலகிருஷ்ண பாரதியார் தமது பாடலில் வினவியிருப்பது போல (இசை: என்.சி. வசந்தகோகிலம் ttp://www.musicindiaonline.com/sநாமும் அவரைக் கேட்க வேணும் போலத் தோன்றுகிறது.

பாவம், சற்று முன் தான் நம்மவர் கிழமாட்டின்  மீதமர்ந்து ஊரெங்கும் இரந்துண்பதைப் பற்றி எவ்வாறு அம்மானைப் பெண்டிர் பேசினார்கள் என்பதைப் பார்த்தோம்.

அந்த இரு பெண்களில்  முதலாமவள் (அவள்தான் நம் சமத்காரவல்லி) எப்படிச் சிவபெருமானை இரண்டாமவளிடம் விட்டுக் கொடுக்காமல் சமாளித்து விடையளித்து  வருகிறாள் என்பதையும் பார்த்தோம்.

இப்போது சமத்காரவல்லி, வேண்டுமென்றே இறைவன் இரந்துண்பதை மீண்டும் பாடலில் கொணர்ந்து, எவ்வாறு இரண்டாமவளை வசமாகத் தன்  வலையில் மாட்ட வைக்கிறாள் என்பதை கீழே தரப்போகும் அம்மானைப் பாட்டில் நாம் கண்டு களிக்கலாம்.

இந்தப் பாடலில் வரும் நம் ஐயன் ஒரு  காட்டாளாகக் காட்சி தருகிறான்:
காட்டானைத் தோல்உடுத்திக் காட்டுவெண் நீறணிந்து..
 என்று துவங்குகிறது சமத்காரவல்லியின் அம்மானைப் பாட்டின் முதலடி.

அதில், ஒரு முரட்டுத்தனமான காட்டானையைச் சிவபெருமான் மீது தாருக  வனத்து இருடிகள் ஏவி விட, அவர் அதன் தோலை உரித்து ஆடையாகத் தரித்துக் கொண்டார் என்ற திரிபுர சம்ஹாரக் கதையை நமக்கு  நினைவுறுத்துகிறாள்.

அத்தோடு, நள்ளிரவில் சுடுகாட்டில் பேய்கள் மத்தியில் உடல் முழுவதும் வெள்ளை வெளேரென்று திருநீறணிந்து ச்மசான  நடனம்ஆடும் ஐயனின் அழகையும் சொல்லி, மேலே தொடர்கிறாள்:
காட்டானைத் தோலுடுத்துக் காட்டுவெண் ணீறணிந்து
ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கும் அம்மானை
இப்படி ஆடையலங்காரம் செய்து கொண்டு எங்கள் பெருமானார் தாம் பிரமனின் கர்வத்தை அடக்கியவர் என்பதைக் காட்டப் பிரமனின்  தலையையே பிச்சையெடுக்கும் ஓடாகக் கொண்டு இரந்து, தமது உணவைத் தேடிக்கொள்வார்என்று நிறுத்துகிறாள், தான் இதுவரை வென்ற  அம்மானைக் காய்களை எண்ணுவதற்கான இடைவெளியை உண்டாக்கிக் கொண்ட சமத்காரவல்லி. 

இதுவரை நான் எழுதியதை வைத்து நீங்கள் இரண்டாமவளான சூரவல்லி, சமத்காரவல்லி அளவிற்கு அறிவுக் கூர்மை இல்லாதவள் என்று  நினைத்திருக்கும் பக்ஷத்தில், அந்தக் கருத்தை இந்த க்ஷணமே நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது உண்டாகிறது. எப்படி  என்று தெரிய பாட்டின் மூன்றாம் அடியில் அவள் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்:
ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கு மேயாயின்
வாட்டமுற்றுத் திருமேனி வாடாதோ அம்மானை?”

இதை நன்றாக ஆழ்ந்து படித்திருந்தீர்களானால், ”ஓட்டைக் கை ஏந்திஎன்ற சொல் தொடரை, சூரவல்லி ஓட்டைக்கை ஏந்திஎன்று தன்  சவுகரியத்திற்கு மாற்றிக் கொள்ளப் போகிறாள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஐயையோ! என்ன பரிதாபம்! நீ பெருமையாகச் சொல்லிக்  கொள்ளப் பார்க்கும் சிவனுடைய கையை ஓட்டைக் கை என்று சொல்லிவிட்டாயேடீ?

பாவம், தாம் கஷ்டப் பட்டு எடுத்த பிச்சை உணவைத் தம்  கையால் வாயிலிடப் போகும்போது அது ஓட்டைக் கையாக இருந்து உண்டியெல்லாம் அதன் வழியே கீழே தரையில் விழுந்து வீணாகிப் போமே? 

அப்படியானால், அவரது பொன்னான திருமேனி என்னாவது? வாடி வதங்கி வற்றலாய்ப் போகாதோ? என்ன கொடுமையடி இது?"  என்று நீட்டி  முழக்கிக் கூறிக்கொண்டு கூறிய சூரவல்லியின் கண்களில், தோழியை மடக்கி விட்ட கர்வம் பளபளத்ததை அவள் கண்களை நேரடியாகப்  பார்க்காமலே உணர்ந்து கொண்டாள் சமத்காரவல்லி.

ஒருகணம் சிவனை மனத்தில் தியானம் செய்து கொண்ட அவள் அடுத்த கணமே தனக்கு  உதித்த விடையைப் பாடலின் இறுதி அடியாக அளிக்கிறாள்:
பாட்டிதரும் பிட்டுண்டு பசியாறும் அம்மானை!
அடியே, சூரவல்லி! உன் போலிப் பரிதாபத்தைக் குப்பையில் போடு! எங்கள் சிவபெருமான் அன்னை, தந்தை இல்லாதவரே ஆனாலும் அவருக்குப்  பூவுலகில்- ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரையில்- ஒரு பாட்டி இருக்கிறாள் தெரியுமா? அவள் பெயர் வந்தி. (என்ன வரப்போகிறது  என்பதை ஊகிக்கத் தொடங்கிய சூரவல்லியின் முகம் மேல்ல வெளிற ஆரம்பிக்கிறது).
கரை பேர்த்து ஓடிக்கொண்டிருந்த வைகை நதியின்  வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, நீண்ட மண்சுவர் எழுப்ப உத்தரவிட்ட பாண்டிய மன்னனின் கட்டளைப்படித் தன் பங்கிற்கு மண்ணைக்  கொட்ட இயலாமல் இருந்த வயதான வந்திப் பாட்டிக்கு, அருள் வடிவினனாகிய ஆலவாய் இறைவன் தானே கூலியாளாகச் சேர்ந்து அவள் அளித்த  பிட்டை வாரி வாரி உண்டது உனக்குத் தெரியுமா?
அதனால், எங்கள் ஐயன் இரந்துண்ணுவது போல வேடம் போடுகிறானே அன்றி, உண்மையில்  கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து உண்ணும் பெருந்தகை என்பதை நினைவில் வைத்துக் கொள்என்று கூறிய சமத்காரவல்லி, அத்தோடு  ஆட்டத்தையும் தன் பக்கம் வெற்றியாக்கி, அடியார் வினைதீர்க்கும் அருமருந்தைத் துதித்தவாறு தன் வீட்டை நோக்கி நடக்கிறாள்.
அவள் வீடு  சேருமுன் நாம் வெல்லப் பிட்டைச் சுவைப்பது போல முழுப் பாடலையும் படித்துச் சுவைப்போம்:
காட்டானைத் தோலுடுத்துக் காட்டுவெண் ணீறணிந்து
ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கும் அம்மானை;
ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கு மேயாயின்
வாட்டமுற்றுத் திருமேனி வாடாதோ அம்மானை?
பாட்டிதரும் பிட்டுண்டு பசியாறும் அம்மானை!
1. வந்திப்பாட்டி தான் சிவனை வேலைக்கு அமர்த்திக் கூலி கொடுத்த ஒரே எம்ப்ளாயர்என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் (கூலி கொடுக்காமல் வேலை வாங்க, பார்வதி தேவி, சுந்தர மூர்த்தி நாயனார் என்று பலர் இருப்பது நமக்குத் தெரிந்ததே).
2. சிவனுக்குத் தாயான பெச்சமாதேவி அம்மையார் (அவ்வம்மை”) பற்றித் தெரிந்து கொள்ள:
 http://www.tamilonline.com/thendral/content.aspx?id=54&cid=8   காணவும்.

(Register freely and Log in to see the full story).

----------------------------------------------------------------------------------------------------------
6.  இடம் ஏற்பார்
"காலைத் தூக்கி நின்றாடும்என்னும் கோபாலகிருஷ்ண பாரதியர் பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடுவதைக் கேட்டுகொண்டே ( ttp://www.musicindiaonline.com/p/x/nqv2PrkDN9.As1NMvHdW/ இதை நான் எழுதும்போது, அந்தப் பாடல் நமது அம்மானைப் பெண் சமத்காரவல்லியின் மனத்தில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்று என்னை எண்ண வைக்கிறது. ஏனென்று கேட்கிறீர்களா?

அவள் தரும் அடுத்த அம்மானைப் பாடலைக் கடைசி வரை கவனித்து ஊன்றிப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.

முந்தி முந்தி நடந்த, நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு நிகழ்ச்சியுடன் பாடல் தொடங்குகிறது.

பகீரதனின் அடாது மழை பெய்தாலும் விடாது செய்ததவத்தால், கங்கை வானத்திலிருந்து அதிவேகமாகக் கீழிறங்கி வந்து கொண்டிருக்கிறாள்.

அதே வேகத்தில் அவள் பூமியில் இறங்கினால் பூலோகம் ஒரேயடியாக அமுங்கிப் பாதாள லோகமாக மாறிவிடும் என்று உணர்ந்த பகீரதன் சிவபெருமானை உதவி செய்யும்படி வேண்டுகிறான்.

(யாரென்ன கேட்டாலும் அலுக்காது உடனே வழங்கும் ஓட்டைக் கையன்என்று நாம் முந்திய பாடலில் தெரிந்துகொண்டபடி) அரனார் உடனே பகீரதனிடம் கவலைப் படாதே, வரச்சொல் அந்த கங்கையை!என்று கூறித் தன் பொன்னிறச் சடையை விரித்து நிற்கிறார்.

கர்வத்துடன் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் வேகவதியைத் தமது ஒளிபொருந்திய சடையில் நிறுத்தித் தாங்கிக் கொண்ட நம் பரமேட்டி அவளைத் தம் தலைமேல் தாங்குபவராகக் காட்சியளிப்பார்.  இந்த அற்புதமான அருட்செயலைப் பாடலின் துவக்கமாகத் தன் அழகான குரலில் இசைகூட்டிப் பாடுகிறாள் முதலாமவளான சமத்காரவல்லி: 
முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்
மின்சடையில் வீற்றிருக்க வைப்பார்காண் அம்மானை
பகீரதனுக்கு அருள் பாலிக்கும் வகையில் தான் சிவபெருமான் கங்கையைத் தலையில் தாங்குபவராகத் துலங்குகிறார் என்றாலும், இது நம் சூரவல்லிப் பெண்ணுக்கு வகையாக ஒரு கேள்வியைக் கேட்கும் வாய்ப்பை அளிக்கிறது.
மின்சடையில் வீற்றிருக்க வைப்பாரே யாமாயின்
இன்னொருத்தி தம்மித்தில் ஏற்றலுமேன் அம்மானை?
“சமத்காரவல்லியே, நீ சொல்வது கேட்க அழகாகத் தான் இருக்கிறது. கருணைக் கடலான உங்கள் பெருமான் நீ கூறியபடி கங்கையாளைத் தலையில் வைத்துத் தாங்குவதையும், அதே கோலத்தில் அம்பலத்தில் கூத்தாடுவதையும் உலகோர் நன்றாகவே கண்டுள்ளார்கள்.
இப்படி ஒரு பெண்ணுக்குத் தனது திருமேனியில் ஒரு இடத்தை, அதுவும் உயர்ந்த இடமாகிய சிரசைக் கொடுத்தவர்,
எப்படி இன்னொரு பெண்ணை- இமயமலை இளவரசியான உமாதேவியை- மணந்து அவளையும் எப்போதும் தன்னோடு இருக்கும்படி இடம் கொடுக்கலாயிற்று?
இது எந்த நியாயத்தில் சேர்ந்தது?” என்று கேட்ட சூரவல்லியின் கேள்வியில் பொதிந்த கேலி சமத்காரவல்லிக்குத் தெளிவாகத் தெரிகிறது. 
இருந்தாலும் தோழியின் கெட்டிக்காரத்தனத்தைத் தன் மனத்திற்குள் சற்றுப் பாராட்டி விட்டுத் தனது விடையை ஒருதரம் மனத்தில் சொல்லிச் சரிபார்த்துக் கொண்டு சமத்காரவல்லி பாடலின் பன்ச் லைன்ஆன இறுதியடியைப் பாடுகிறாள்:  
தம்இடக்கால் ஏற்றும் தன்மையர்காண் அம்மானை!
ஆமாமடி, எங்கள் தலைவரான சிவபெருமான் மற்றத் தெய்வங்களிலிருந்து பலவகையில் மாறுபட்டவர். அவருடைய நடவடிக்கைகள் யாவுமே பார்ப்போருக்கு முரணாகத் தோன்றும்.
வேறு எவராவது யானைத்தோலும் புலித்தோலும் ஆடையாகவும், பாம்புகளை அணிகலங்களாகவும், சுடுகாட்டுச் சாம்பலைப் பூசுவதும் எருக்கு, தும்பை, கொன்றை போன்ற பூக்களை விரித்துப் போட்ட சடையில் சூடுவதும் அலங்காரங்களாகவும் கொண்டு, நள்ளிரவில் மயான பூமியில் நடனமிடுவதையும் கண்டிருக்கிறோமா?
இப்படி எதையும் ஒரு இடக்காக, அதாவது பிடிவாதத்தோடு முரணாகச் செய்யும் எங்கள் அரனார், தம்மை அடையப் பலகாலம் தவமிருந்த உமையன்னையை தம்மிடத்தில், அதாவது இடப்பாகத்தில், ஏற்றுத் தாம் மகிழ்ந்து பிராட்டியையும் மகிழ வைப்பார்.
இன்னொரு செய்தியையும் உனக்குச் சொல்ல வேண்டும்.
எம் ஐயனுக்கு மலைமகள் இடங்கொண்ட தமது உடலின் இடது பக்கத்தில் ஒருதனி வாஞ்சை உண்டு.
பஞ்சக்ருத்யம் என்னும் ஐந்தொழில் புரியும் அழகைச் சித்தரிக்கும் வண்ணம் ஆனந்த நடமாடும் எங்கள் பிரான் எந்தக் காலை உயர்த்திக் காட்டுகிறார் என்று நீயும் பார்த்திருக்கிறாயே,
அது எங்கள் அன்னையான உமாதேவியின் திருப்பாதம் அல்லவோ?
அதனால் தான் அதை வான்நோக்கித் தூக்கியும் வலது காலை முயலகன் என்னும் ஒரு அசுரனை அழுத்திப் பிடித்து வைக்குமாறு தரையில் வைத்தும் ஆடுகின்றார்.
இத்தகைய அரிய தன்மை பொருந்திய எம்பிரான் தம்மிடத்தைத் தேடி வரும் அன்பர்களுக்கும் அருள் புரிந்து பிறவித் துயர் அறச் செய்வார். ஆகவே, நீயும் என்னுடன் சேர்ந்து அவரது புகழை மேலும் சொல்லித் துதிப்போம் வா!” என்று அழகாகப் பேசிய சமத்காரவல்லியின் முகத்தில் அன்பு ஒளிர்கிறது.
இடக்கான கேள்வியொன்றைக் கேட்டுத் தோழியை மடக்கியதாகக் கோட்டை கட்டிய சூரவல்லிக்குத் தான் பயன்படுத்திய தம்மிடத்தில் என்ற சொல்லில் எப்படித் தன் சிநேகிதி சிலேடையைப் புகுத்திப் பலவாறாகத் தன் கட்சியைப் பலப்படுத்திக் கொண்டாள் என்பது வியப்பைத் தந்ததோடு, அவள் உள்ளத்தில் தானும் இனிச் சிவபெருமானைத் துதிக்க வேண்டும் என்ற ஆசையையும் விளைவித்தது.  

இந்தச் சிந்தனையோடு அவள் அம்மானைக் காய்களைத் தரையில் வைத்துத் தன் வீடு நோக்கிச் செல்லத் தொடங்குகிறாள்.  நாமும் அந்த அழகிய அம்மானைப் பாடலை நமக்குள்ளாகப் பாடிக் கொண்டு அங்கிருந்து நடையைக் கட்டுகிறோம்.,     
முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்
மின்சடையில் வீற்றிருக்க வைப்பார்காண் அம்மானை
மின்சடையில் வீற்றிருக்க வைப்பாரே யாமாயின்
இன்னொருத்தி தன்னைஇடம் ஏற்றலுமேன் அம்மானை?
தம்மிடக்கால் ஏற்றும் தன்மையர்காண் அம்மானை!
(இடக்கு = முரண்; எதிரிடை; முரட்டுத்தனம், அடங்காமை, பிடிவாதம்)
----------------------------------------------------------------------------------------------------------

7. ஆடல் காணீரோ
சென்ற அம்மானைப் பாடலில், எப்படிச் சிவபிரானின் இடப்பாகத்தாளான உமை, அவர் தலைமேல் அமர்ந்து (அலைந்து கொண்டு) இருக்கும் கங்கையாளை ஆட்டுவிக்கிறாள் என்று கண்டோம்.

இப்போது, அவர்கள் இருவருக்குமே போட்டியாக யார் முளைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள போகிறோம்.

அதற்காக, மீண்டும் பாடல்நல்லூரில் (அதுதான் நம் அம்மானைப் பெண்கள் வசிக்கும் சிற்றூரின் பெயர்), ஓடு வேயப்பெற்ற ஒரு சிறிய, ஆனால் தூய்மையும் அழகும் தவழும் வீட்டின் திண்ணையில், தங்கள் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் பெண்களின் அருகே சென்று அவர்கள் பாடும் பாடலைச் செவி மடுப்போம் (இந்த நேரத்திற்குள் உங்களுக்கு இரு அம்மானைப் பெண்களின் பெயர்களும் நன்கு பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும் என நம்புகிறேன்).      
ஆலவாய்த் திருத்தலத்தில், சிவபெருமானார் நிகழ்த்திய அருட்செயல்கள் அறுபத்து நான்கைப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் விரித்துக் கூறும்.

அந்த விளையாடல்களின் பெருமையை ஆடல் காணீரோஎன்று தொடங்கும் (எனக்கு மிகவும் பிடித்த) திரைப்படப் பாடலில் எம்.எல். வசந்தகுமாரி சாருகேசியில் தொடங்கி ராகமாலிகையாக மிக அழகாகப் பாடியுள்ளதை ( http://www.musicindiaonline.com/p/x/Qq32fJ_n5S.As1NMvHdW/  ) நம் இரு அம்மானைப் பெண்களும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

அடுத்த அம்மானைப் பாடலைத் தனது பாடல் தலைவனான அரனின் திருவிளையாடல்களில் ஒன்றை நினைவுகூர்ந்து சமத்காரவல்லி தொடங்குகிறாள்:
அடியே சூரவல்லி! அம்பலத்தில் கண்டோர் வியக்கும் வண்ணம் நடனமாடும் திறமை மட்டுமன்றி, எங்கள் சிவபெருமானுக்கு. ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபத்து நான்கு விளையாட்டுகளில் தேர்ச்சியுண்டு.

அவை யாவும் மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரைஎன்று பாடப் பெறுமாறு நிலவளமும் நீர்வளமும் நிறைந்த கூடல் மாநகரில் நடந்தவை.

அவற்றில் ஒன்றான முப்பத்திரண்டாம் திருவிளையாடலில் எம் இறைவர் என்ன செய்தார் தெரியுமா?

பொதுவாக, அடியவர்கள் தாமே இறைவனைத் தேடி அருள்பெறச் செல்வார்கள்? இங்கே நடந்த கதை அப்படியே தலைகீழ்!

அக்காலத்தில், ஆலவாய் நகரில் வணிகர் குலத்தில் வாழ்க்கைப் பட்டிருந்த மங்கையர் அனைவரும் தங்கள் முந்தைய பிறவியில் தாருகா வனத்து ரிஷி பத்தினிகளாக இருந்து, தம் கணவன்மார்களால் சபிக்கப் பட்டு வணிகப் பெண்களாகப் பிறந்தவர்கள் ஆவர்.

அமரர் அமுதுண்டு வாழத் தாம் கொடிய நஞ்சை உண்ணத் தயங்காத தியாகப் பொருப்பு, த்ரியம்பகன்ஆன நம் பரமேட்டி இதை அறிந்து அவர்களை உய்விக்கத் திருவுள்ளம் கொண்டார்.

சந்திர வம்சத்தின் மணிவிளக்கான தடாதகைப் பிராட்டி, மதுராபுரி ராணி என்று பட்டம் சூட்டிக் கொண்ட காலத்தில், அந்த அங்கயற்கண்ணி அன்னையின் கணவர் சுந்தரபாண்டியனாய் விளங்கிய நம் ஐயன் ஒரு வளையல் விற்போனின் வடிவம் பூண்டு, அந்த வணிகர் குலப் பெண்மணிகளை நாடிச் சென்றார்.

விதவிதமான வளையல்களை அப்பெண்டிருக்குத் தம் கரத்தாலேயே அணிவித்தார். சோமசுந்தரக் கடவுளால் தீண்டப்படும் பெரும்பேறு பெற்ற அந்த மங்கையர்கள் தம் சாபம் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து சிவலோகம் எய்தினார்கள்.

ஒரேமூச்சில் இத்தனையும் சொல்லி முடித்து நிறுத்திய சமத்காரவல்லி, சூரவல்லியின் முகக்குறிப்பைப் பார்த்து,’நான் சொல்லியிராவிடில் இந்தப் பெண்ணுக்கு இந்தக் கதைபற்றி ஒன்றும் தெரிந்திருக்காதுஎன்று மனத்தில் எண்ணிக் கொண்டாள்.

அதைத் தொடர்ந்து, தன் அம்மானைப் பாடலைச் சற்று உரத்த குரலில் பாடி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தாள். (அது சாருகேசி இராகத்தில் அமைந்தது என்று கேள்வி!):
விளையாட்டாய் மாமதுரை மெல்லியர்தம் கைதொட்டு
வளைபூட்டித் தாமருளும் வள்ளல்காண் அம்மானை
இதுவரை, சோமசுந்தரர் வளையல் விற்ற திருவிளையாடல் பற்றித் தனக்குத் தெரியாதவள் போல நடித்த இரண்டாமவளான சூரவல்லி, இப்போது தன் சாமர்த்தியத்தைக் காட்டும் தருணம் கனிந்து வந்துள்ளதை உணர்ந்தாள்.
சென்ற அம்மானைப் பாடலில் கங்கையாளையும் உமையம்மையையும் தலையிலும் இடப்பாகத்திலும் சிவனார் தாங்கிக் கொண்டார் என்று சொன்னதைத் தன் தோழி மறந்து விட்டதையும் புரிந்துகொண்டாள். அப்படி வா வழிக்குஎன்று மனத்தில் கருவிக்கொண்டு இராமபாணம் போலத் தனக்கான அம்மானை அடிகளைச் சமத்காரவல்லியின்பால் எய்தாள்:
வளைபூட்டித் தாமருளும் வள்ளலே ஆமாகில்
சளையாது இருவர்பழி சாற்றாரோ அம்மானை?”
அடியே என் ராசாத்தி, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டாய் மனைவியரைக் கொண்டவர் இப்போது ஒரு பெண்கள் கும்பலையே நாடிச் சென்று கரம் பற்றினார் என்று பெருமையாகச் சொல்ல வந்து விட்டாயே?

இந்தச் செய்தியைக் கேட்டதும் அந்த இரு மனைவியரும் இரட்டை நாதஸ்வரம் போல மாற்றி மாற்றி உங்கள் சிவனார் காதில், ஆறாம் கட்டை சுருதியில், தம் குற்றச் சாற்றைக் கூறி/கூவி, அவரை வாங்கு வாங்கென்றுபின்னியிருப்பார்களே? ஐயோ, பாவம் அரனார்!என்று பொருள்படுமாறு அமைத்த தன் வினாவை முதலைக் கண்ணீர் மல்கப் பாடினாள் சூரவல்லி.
தன் உயிர்போனாலும் சிவபெருமானை விட்டுக் கொடுக்காத உள்ளன்பு கொண்ட சமத்காரவல்லிக்குத் தன் தோழியின் கேள்விக்கு விடையளிக்க ஒரு கணநேரப் பொழுது கூடத் தேவையாக இருக்கவில்லை.
அவள் வாயிலிருந்து பாடலின் இறுதி அடி, அந்த ஐயனே எடுத்துக் கொடுத்தது போல, ’டாண்என்று வெளிவந்தது:
துளைசெவிபூண் தோடரவம் காக்குங்காண் அம்மானை!
அம்மா, வீர தீர சூரவல்லி! எங்கள் பெருமான் நடக்கப் போவதை எல்லாம் முன்னறிந்தவர். நீ சொன்னவாறு தம் மனைவியர் பழி சாற்றக் கூடும் என்பதை வளையல் வியாபாரி விளையாட்டைத் தொடங்கும் முன்னமே அறிந்திருந்த அவர், தமது காதுகள் இரண்டிலும் அழகிய பெரிய பாம்புகள் இரண்டைத் தோடாக மாட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பதை நீ அறியாயோ?

சதா சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் பத்மன், பிங்களன் என்ற இரு தேவர்கள் அல்லவோ அக்காதணிகள்?

அந்த அரவங்கள் எம் பிரானுடைய செவித்துளையில் வேறு அரவம் நுழைய இடங்கொடுக்குமோ? இது தெரியாமல் ஏதோ என்னை மடக்கி விட்டதாக மனப்பால் குடித்தாயே?

இப்போதைக்கு நம் ஆட்டத்தை நிறுத்திப் பின்னர் தொடருவோம். அதற்குள் நல்ல நூல்களைப் படித்து எங்கள் தலைவனைப் பற்றிய செய்திகளை நன்கு அறிந்துகொண்டு வாஎன்று சமத்காரவல்லி சொல்லி முடிப்பதற்கும் வீட்டினுள்ளிருந்து அவளுடைய அன்னை அவளைத் துணைக்கு விளிப்பதற்கும் சரியாக இருந்தது.
நாம் இப்போது முழுப்பாடலையும் பார்ப்போம்:
விளையாட்டாய் மாமதுரை மெல்லியர்தம் கைதொட்டு
வளைபூட்டித் தாமருளும் வள்ளல்காண் அம்மானை
வளைபூட்டித் தாமருளும் வள்ளலே ஆமாகில்
சளையாது இருவர்பழி சாற்றாரோ அம்மானை?
துளைசெவியில் தோடரவம் காக்குங்காண் அம்மானை!
பின்குறிப்பு:
1. நமது அம்மானைப் பெண்கள் இந்தக் காலத்தவராக இருந்திருந்தால், தாங்களும் சிவபெருமானைப் போலக் காதார் குழையாக, வேறு சத்தம் எதுவும் செவித்துளை வழியே நுழைய விடாமல் தடுக்கும் செவிபேசிகளை (ear phone) அணிந்து கொண்டு தாங்கள் எதுவும் பாடாமல் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள். நமது நல்ல காலம், அவர்கள் அந்தக் காலத்து இளம் பெண்களாக இருப்பது!
2. வளையல் விற்ற படலத்திலிருந்து ஒரு பாடல்:
மன்னு மறையின் பொருளுரைத்த மணிவாய் திறந்து வளைகொண்மின்
என்னு மளவில் பருவமுகில் இமிழின் இசைகேட் டெழுமயில்போல்
துன்னி மணிமே கலைமிழற்றத் தூய வணிகர் குலமகளிர்
மின்னு மணிமா ளிகைநின்றும் வீதி வாயில் புறப்பட்டார்
  - பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் 
   (ஓவியர் எஸ். ராஜத்தின் படத்தை இணைப்பில் காணவும்)  

----------------------------------------------------------------------------------------------------------



No comments: